திருவள்ளூர்: மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ் உணர்வாளர்கள் பலரும் எழுதியும் பேசியும் எழுதியும் இந்தி திணிப்பின் ஆபத்தை மக்களுக்கு விளக்கினர். இதையெல்லாம் உள்வாங்கி இருப்பது ஓர் உயிர், அது போகப்போவது ஒரு முறை, ஒரு நல்ல காரியத்திற்காக நாட்டுக்காக போராடி வாழ்ந்து தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.
கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, சண்முகம் போன்றவர்கள் தியாகங்களை போற்றுவதற்காக ஆண்டு தோறும் ஜனவரி 25ஆம் நாள் மொழி போர் தியாகிகள் நாளாக நாம் கடைபிடிக்கிறோம்.
முதல் தியாகி சின்னசாமி மொழிக்காக உயிரைக் கொடுத்தவர், 1964அன்று தீக்குளித்து உயிரிழந்தார். மொழிப்போர் தியாகி இன்றைக்கும் சிவலிங்கம் பெயரில் ஒரு தெரு இருக்கிறது. மொழிப்போர் தியாகி அரங்கநாதன் பெயரில் சென்னையில் பாலம் இருக்கிறது. மொழிப்போர் தியாகிகள் நினைவாக நூலகம், பாலம், சாலை அவர்களது பெயரால் அமைக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் திராவிட இயக்கத்தின் வரலாறு. உயிரைத் தந்து தமிழ் தாயை காத்தவர்கள் நாங்கள். நன்றி உணர்வோடு இன்று அவர்களை நினைத்துப் பார்க்கிறோம். அவர்களது தியாகத்திற்கு தலை வணங்குகிறோம். யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர்கள் அல்ல. மொழிப்போர் தியாகிகளின் தியாகம் வீண் போகவில்லை. பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழில் படிக்கும் நிலை இங்கு உள்ளது.