திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தப் புயல் தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாகக் கன மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் அதிகபட்சமாக 13 செ.மீ மழையும், ஊத்துக்கோட்டையில் 12 செ.மீ மழையும், பொன்னேரியில் 10 செ.மீ மழையும், சோழவரம், ஆவடி, திருத்தணி, திருவள்ளூர், தாமரைப்பாக்கத்தில் தலா 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி ஜமீன் கொரட்டூரில் தலா 6 செ.மீ மழையும், பூந்தமல்லி, செங்குன்றம், பூண்டி, ஆர்கே பேட்டையில் தலா 5 செ.மீ மழையும், திருவாலங்காடில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏரிகளைக் கடந்த 24 மணி நேரமாக நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து, நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான கொற்றலை ஆறு, ஆரணி ஆறு, கூவம் ஆறு பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.