திருவள்ளூர் மாவட்டம், மாளந்துர் என்ற கிராமத்தில் சுமார் 2,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், இக்கிராமத்தை சுற்றி
ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஆரணி ஆற்றின் இடையே உள்ள மண் பாதையைக் கடந்துதான், ஊத்துக்கோட்டை ,பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக சென்று வருவதுண்டு.
இது தவிர மாளந்துர் கிராமப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் சுமார் 500 ஏக்கர் உள்ளது. இந்த நிலங்களானது ஆற்றின் அக்கரை பகுதியில் இருக்கிறது. அந்நிலத்தில் காய்,கனிகள், நெற்பயிர், பூக்கள் உள்ளிட்ட வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”ஆரணி ஆற்றை கடந்துதான் அக்கரைக்கு சென்று விவசாயம் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவோம். மேலும் விளைவிக்கின்ற பூக்கள், பழங்களை பறிக்கவும், அதனை அறுவடை செய்யவும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்கிறோம். இதனால் உரிய காலங்களில் அதனை எடுத்து சென்று வியாபாரம் செய்ய முடியாததால், மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றோம். எனவே, ஆரணி ஆற்றின் மீது தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்” என்றனர்.
மேலும் இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “எங்களுக்கு இந்த ஆற்றின் இடையே பாலம் அமைத்து கொடுத்தால் நாங்கள் அருகே உள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, எங்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, கால்நடை மருத்துவமனை, உயர்நிலைப் பள்ளி, பதிவுத்துறை, தபால் நிலையம் ஆகியவற்றை பயன்படுத்த வசதியாக இருக்கும். இல்லையெனில் மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது சுமார் 15 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் ஆரணி ஆற்றின் மீது தரைப்பாலம் அமைத்து தரவேண்டும். மேலும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கைை எடுக்கப்படவில்லைை” என்று வேதனையுடன் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை: ஆதிக்க சமூகத்தினருக்கு துணை போகும் வருவாய்த்துறை