கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, அங்கு செயல்பட்டு வந்த பூ, பழ மார்க்கெட் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே தற்காலிக பழ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
ஆயுதபூஜை மற்றும் பண்டிகைகள் நெருங்கி வருவதால் வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாகவும் அரசியல்வாதிகளின் தலையீட்டினாலும் மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அலுவலர்கள் பழ வியாபாரிகளை வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
கோயம்பேட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த நிலையில், மாதவரத்தில் 200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (அக்.22) காலை திடீரென்று அலுவலர்கள் பழங்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு பூட்டு போட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாதவரத்தில் அலுவலர்கள் இடையூறு செய்வதால் வழக்கம்போல் கோயம்பேட்டில் பழ மார்க்கெட் இயங்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது போல் மீதமுள்ள வியாபாரிகளும் கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்