திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு '129' என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து இன்று (டிச.12) காலை புறப்பட்டுச் சென்றது.
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஏரி தரைப்பாலம் அருகே சென்றபோது, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் தொழிற்சாலைப் பேருந்து, அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசுப்பேருந்து ஓட்டுநர், தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த மணவாளநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசுப்பேருந்து - தனியார் தொழிற்சாலை பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலை வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சாலை குறுகிய அளவில் இருப்பதால் சாலையை விரிவாக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று(டிச.12) விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தர்மபுரி மருத்துவ மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரம் - 4 சீனியர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!