திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் சென்னையை ஒட்டியுள்ள பகுதி என்பதாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு, திருமழிசை காய்கறி சந்தை திறப்பு போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது.
சுகாதாரத் துறையினர் மாவட்டம் தோறும் கிராமம் கிராமமாக சென்று காய்ச்சலைக் கண்டறிய முகாம் நடத்துவதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி கூறுகையில், ''திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு 3000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வைரஸ் தொற்று பரவாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், தகுந்த இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
திருவள்ளுவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு நோய்கள் தொடர்பாக தினசரி ஏராளமானோர் வருகின்றனர். அவர்களையும் தகுந்த இடைவெளியுடன் வழி நடத்தி அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை தொய்வில்லாமல் செய்து வருகிறோம்.
இங்கு சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் வரும் நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் அதன் முடிவு வரும்வரை தங்களைத் தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொணடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக இங்கு வந்து தங்களை பரிசோதித்துக் கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் சோடியம் குளோரைடு மற்றும் பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மைப்படுத்தி வருகிறோம்.
வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதாரண காய்ச்சல் என மாத்திரைகள் போட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆனால் ஐந்தாவது தினம் அவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும். அப்போது பல பேர் பயந்து மருத்துவமனைக்கு வருகின்றனர். அதுபோன்ற நிலையில் வராமல் ஆரம்பக் கட்டத்திலேயே வந்தால் எளிமையான முறையில் அவர்கள் குணப்படுத்தி அனுப்ப முடியும். எனவே மக்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டு தங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்'' என்றார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை முதலவர் அரசி திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 26 ஆயிரத்து 311 நபர்கள் என்றும், இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 24 ஆயிரத்து 275 நபர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 436 ஆக உள்ளது.
தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 600 நபர்கள் என்றும், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 467 நபர்கள் வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் பருவத் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்