திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த அம்சா நகர் பகுதியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் இன்று (ஜன.23) வழக்கம் போல் வேலைகளுக்கு சென்றிருந்த போது, ஒருவீட்டில் திடீரென எரிவாயு உருளை ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது.
வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது, வேலு என்பவரது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இந்த விபத்து குறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்குள், வேலுவின் வீட்டிலிருந்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதில், அருகில் இருந்த, 5 குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் வீட்டில் இருந்த பீரோ, டி.வி., ஆடைகள், சமையல் பொருட்கள், நகை, பணம் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இவற்றைப் பார்த்த பெண் ஒருவர் மயக்கமடைந்து விழுந்தார். தீயணைப்பு துறை வீரர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டதின் பேரில் வட்டாட்சியர் செந்தில்குமார் அப்பகுதி மக்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க:ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடுகள் திருட்டு!