தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற சிவராத்திரி அபிஷேகம் மற்றும் நாட்டியாஞ்சலி தஞ்சாவூர்:சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து சிவாலயங்களிலும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வண்ணம் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கோலாகலமாக நடந்துமுடிந்தன.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையாருக்கு திரவியபொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், கனி வகைகள், சந்தனம் ஆகியவற்றால் 4 கால அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நந்தி மண்டபத்தில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. அதில் பரதநாட்டிய கலைஞர்கள் பரதம் ஆடி நாட்டியாஞ்சலி செலுத்தினர்.
மேலும் தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள குபேரன் வழிபட்ட ஸ்தலமான அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை தஞ்சைபுரீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், சந்தனம், இளநீர், தேன், பழங்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் நான்கு கால அபிஷேகம் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் குபேரர் நாட்டியாஞ்சலி சார்பில் நடைபெற்ற விழாவில் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி நாட்டியாஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூரில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வண்ண பூக்களால் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் அனைத்து சிவாலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: Maha Shivratri: அண்ணாமலையார் கோயில் லிங்கோத்பவர் சிறப்பு அபிஷேகம்