திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், அரசு ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவரது மனைவி ரோஜா ரமேஷ், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1ஆவது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். ஜனவரி 24ஆம் தேதி வந்து மாலை வீட்டில் இருந்த ரோஜா, மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, காரில் கடத்திச் சென்றுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தியிடம் ரமேஷ் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாண் தலைமையில் காவல் துறையினர் 4 தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே தங்களை கடத்திய மர்ம கும்பல், ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள ராள்ளகுப்பம் என்ற பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக, அன்று இரவே ரோஜாவும் அவரது மகன் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அவர்களை அளித்த தகவலின்பேரில் பல்லவடா பகுதியில் சம்பவ நாளில் பயன்படுத்தப்பட்ட செல்போன் அழைப்புகளை போலீசார் சேகரித்தனர். அதில் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர்(26) என்பவரின் எண்ணில் இருந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது.