திருவள்ளூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டத்தின் மீது மரம் விழுந்ததில் 15 மாணவர்கள் பலத்த காயம்..! திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் ஊராட்சியில், அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நெடுஞ்சாலை ஓரத்தில் இயங்கி வருகிறது. பள்ளியின் சுற்றுப்புறத்தின் அருகே பழமையான மிகப்பெரிய அரசமரம் உள்ளது. அந்த மரத்தின் கனமான பக்கவாட்டில் உள்ள கிளை திடீரென முறிந்து பள்ளி கட்டடம் மீது விழுந்தது.
இதனால் பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் நான்கு மாணவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து பள்ளிக்குள் இருந்த அனைத்து மாணவர்களையும் மீட்டனர். பின், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து காயமடைந்த மாணவர்களைப் பார்வையிட்டுப் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், போலீசார் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீதமுள்ள மரக்கிளைகளை உடைத்து அகற்றினர். இதனால், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், மழைக் காலம் முடிந்ததும் பள்ளி கட்டடம் மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் இது போன்ற சம்பவம் நடைபெற்றதாகவும், இதற்கு கல்வித்துறை அதிகாரிகளே பொறுப்பு என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!