திருவள்ளூர்: தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே மற்றொரு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்காக சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தச்சூர் - சித்தூர் 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சாலைக்காக விளை நிலங்களை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் இன்று வந்தனர்.
உரிய இழப்பீடு ஏதும் வழங்கப்படாமல் முப்போகம் விளையும் நிலங்களை அளவீடு செய்ய கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை சாலைக்காக கொடுத்து விட்டால் வேறு எந்த வேலையும் தெரியாத விவசாயிகள் எப்படி பிழைப்பது என கேள்வி எழுப்பினர்.