திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முனிநாயுடு பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவருக்கு கோனசமுத்திரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் உள்ளே புகுந்து நாசம் செய்துவிடுவதால், அங்கு அவர் சட்டவிரோதமாக வேலி அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார்.
இதை அறியாத விவசாயக் கூலியான சஞ்சீவி என்பவர், 2015ஆம் ஆண்டு நெல் மூட்டைகளை எடுப்பதற்காக அந்த வேலியைத் தாண்டிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இந்நிலையில் இரவு நிலத்திற்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரது மகன் சின்னதம்பி அங்கு சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கி சஞ்சீவி உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து பொதட்டூர் பேட்டை காவல் நிலையத்தில் சின்னதம்பி கொடுத்த புகாரின்பேரில் நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணி நாயுடு என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜராகி வாதாடிய வழக்கில், இன்று நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.
அத்தீர்ப்பில், சட்டவிரோதமாக மின் வேலி அமைத்து அதில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி நாசம் செய்வதை தடுக்க அமைத்த மின்வேலியில் சிக்கி கூலித் தொழிலாளி பலியான சம்பவத்தில் விவசாயிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்!