திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். இவர், 90ஆயிரம் ரூபாய் மதிப்பில் EPluto7G என்ற எலக்ட்ரிக் பைக் வாகனத்தை கடந்த 7 மாதங்களுக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில், தேவராஜ் வெளி ஊருக்குச் சென்ற நிலையில் வீட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட தேவராஜின் மகன் தீயை அணைக்க முற்பட்டும் முடியவில்லை. அதற்குள், தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்றொரு பெட்ரோல் இருசக்கர வாகனத்தின் மீது எரிந்த நிலையில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ மளமளவென வீடு முழுக்கப் பரவியது. உடனடியாக வீட்டில் இருந்த தேவராஜின் தாயார், மனைவி, மகன் ஆகியோர் பின் கதவின் வழியாக தப்பினர்.
இதனால், வீட்டில் இருந்த ஏசி உள்ளிட்ட மின் உபயோக பொருள்களும் தீயில் கருகி நாசமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.