திருவள்ளூர்:திருத்தணியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் கமலா திரையரங்கம் அருகில் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, போன்ற முக்கியப் பிரச்னைகளை முன்னெடுத்து திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வரும் நிலையில் திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரும்பான்மையான கட்சிகளும் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தால் தீர்மானத்தை இந்திய குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் போஸ்ட்மேன் வேலைபார்க்கும் தமிழ்நாடு ஆளுநர் அதைப்பிரித்து படித்து, அதில் குறை உள்ளது என்று அமைச்சர்களை அழைத்து கூறுவது எந்த விதத்தில் நியாயம். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படாமல் உள்ளார்’ என்றார்.