திருவள்ளூர்: மீண்டும் லாக் டவுன் என்று வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் பூரண குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து 697 நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முககவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை பொது மக்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(செப்.21) ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னிலையில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் பயணிகள், நடத்துநர், ஓட்டுநர் ஆகியோரிடம் முகக்கவசம் அணிவது குறித்தும், சமூக விலகலை கடைபிடிப்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் அனுமதிக்கக்கூடாது என்றும், பேருந்து இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், '' தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். இதனைப் பின்பற்றாத 50 ஆயிரம் பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்க வேண்டும் என்று மருத்துவர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல ஆரம்பத்தில் மருத்துவ பரிசோதனையில் 15 முதல் 20 விழுக்காடு தொற்று பாதிப்பு உறுதியாகி வந்த நிலையில், தற்போது வைரஸ் பரிசோதனை பாதிப்பு 10க்கும் கீழ் சென்றுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் அடுத்ததாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ்-ஆப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்'' என்றார்.
இதையும் படிங்க:வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி முடிவு