திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் தேவி தலைமையிலான அலுவலர்களும் காவல் துறையினரும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாட்டைச் நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வருவதைக் கண்ட அலுவலர்கள் சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் இருந்து பூரணச்சந்திரன் (52) அவரது மனைவி பரிமளா மற்றும் மகள், நண்பர்கள் பள்ளிப்பட்டு பகுதியில் நகை வாங்க வந்தது தெரிய வந்தது. காரில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மூன்று லட்சத்து ஒன்பதாயிரத்து 500 ரூபாய் அவர்களிடம் இருந்தது தெரிய வந்தது. இதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்தப் பணத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்து, திருத்தணி கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவத்திற்கு முன்பாக திருத்தணி வருவாய்த்துறை அலுவலகத்திற்கு வரும்போது பணம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தேவியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சொகுசு கார் ஓட்டுநரிடம் இருந்து பணத்தை அதே காரில் வந்த ஒரு நபர் வாங்கி பாக்கெட்டில் வைத்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் இதனால் காரில் வந்தவர்கள் கையிலிருக்கும் பணம் குறித்த முழுமையான விவரத்தைக் கூறவில்லையா அல்லது பறக்கும் படையினர் பணத்தை சரியாக பறிமுதல் செய்யவில்லையா அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறைவாகக் கணக்கு காட்டப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் திருவள்ளூர் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பொன்னையா முறையான விசாரணை மேற்கொள்வாரா என்ற கூடுதல் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.