திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் ரூ.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வெங்கத்தூர் ஊராட்சியில் 15ஆவது மத்திய நிதிக்குழு மான்யத்தின்படி ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் அடுத்த கே.கே.நகர் குடிசைப்பகுதியில் 265 மீட்டர் தூரத்திற்கு ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி 90 விழுக்காடு முடிவடைந்த நிலையில் ஊராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கூவம் ஆற்றங்கரையோரத்தில் உள்ள வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்துடன் இணைத்து இந்த கால்வாயை கட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி திருவள்ளூர் நகர திமுக செயலாளரும், திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் மின்கம்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயை மர்ம நபர்களை கொண்டு உடைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பிரமுகர் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், பாமகவைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினருமான பாலா என்கிற பாலயோகி தலைமையில், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு திருவள்ளூர் - பூவிருந்தவல்லி சாலையில் மழை நீர் கால்வாயை உடைத்து சேதப்படுத்திய திமுக நகர செயலாளரும், திருவள்ளூர் நகர்மன்றத்துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.