திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் புழலில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (பிப்ரவரி 7) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு என்றார்.
“திமுகவும், அதிமுகவும் இதை அரசியல் ஆக்குகிறார்கள். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஆனால் பலரும் இந்தத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது எனக் கூறுவதாகவும், இந்த விவகாரத்தை வைத்து அதிமுகவும், திமுகவும் அரசியல் செய்து மக்களை முட்டாளாக்குகின்றன.
தீர்மானம் நிறைவேற்றி இரும்புக்கரம் கொண்டு நீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். நீட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் மக்களை முட்டாள்களாக்க வேண்டாம்.
திமுக அளித்த வாக்குறுதியின்படி தீர்மானம் நிறைவேற்றி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க வேண்டும். நீட் விவகாரம் காரணமாகவே ஆளுநரைத் திரும்பப் பெற திமுக வலியுறுத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வது குறித்து இனிதான் முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பணபலம் அதிகாரத்தை எதிர்த்து தேமுதிக போட்டி
ஆளும்கட்சியின் பணபலம், ஆட்சிபலம், அதிகார பலத்தை எதிர்த்து தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். உண்மை, நேர்மை, லட்சியத்தை வைத்து தேமுதிக போட்டியிடுவதாகவும், நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவிற்கு மக்கள் மாபெரும் வெற்றியை அளிப்பார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
திமுகவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாகவும், மக்களை நேரடியாகச் சந்தித்துவருவதாகவும், மக்கள் என்ன தீர்ப்பை அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் பிரேமலதா தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் விலக்கு புதிய மசோதா: இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்