திருவள்ளூரை அடுத்த செங்குன்றம் அருகே இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பலர் பணிபுரிந்து வருவதாக புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு சண்முகம் என்பவர் புகார் மனு அளித்திருந்தார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வன், முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்து கொண்டிருந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை மீட்டனர்.
பின்பு அவர்களை கோட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்து அங்கு அவர்களுக்கு மறுவாழ்வு நிதி மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
பின்னர் இது குறித்து ஆட்சியர் கூறும்போது இதுபோல் தொழிலாளர்களை முன்பணம் கொடுத்து குடும்பத்துடன் அழைத்துவந்து கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்களை மீட்டு அழைத்து வந்துள்ளோம். அங்கு குடும்பத்துடன் மீட்கப்பட்ட சிறுவர்களின் கல்விக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும்.
அவர்களுக்கான மறுவாழ்வு நிதி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இனிவரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
மஸ்கட்டில் கொத்தடிமையாக இருந்த தமிழ்நாட்டுப் பெண் மீட்பு!