திருவள்ளூர்: அரக்கோணம் நாகவேடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி (15) என்ற சிறுவன் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி தனது தந்தையிடம் செல்போன் கேட்டு வற்புறுத்தியுள்ளான்.
தந்தை செல்போன் வாங்கித் தராத நிலையில் சிறுவன் முனுசாமி பெற்றோர்களுடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளான். இதனையடுத்து முனுசாமியின் பெற்றோர், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடி வந்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிப்பு:
இந்த நிலையில் இன்று (ஜூலை. 18) திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் சுற்றித்திரிந்ததை கண்ட திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறுவனிடம் விசாரணை செய்தனர்.
அப்போது சிறுவன் அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து முனுசாமி குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது முனுசாமி செல்போன் வாங்கித்தராததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனை அடுத்து சிறுவனை ரயில்வே பாதுகாப்பு படையினர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல்போன சிறுவனை பத்து நாள்களில் மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சிறுவனின் பெற்றோர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'தேர்வில் தோல்வியா? இந்தாங்க இலவச அறை...' - கலக்கும் காட்டேஜ் உரிமையாளர்