திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பேரண்டூர் கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் ஊருக்குள் உள்ள வெட்டியான் குளத்தில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீருடன் கழிவு நீர் கலந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்நிலையில், கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 65 க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதால், ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை
பின்னர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், "வயிற்றுப்போக்கு ஏற்பட்ட 7 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், 5 பேர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேலும், இருவர் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார். மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கண்டறிய குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
டேங்கர் லாரிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.7.10 கோடியில் புதிய மழைநீர் வடிகால்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு