திருவள்ளூர், முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகை விழா மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்ததால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகன் மலைக்கோவிலில் குவிந்தனர்.
பக்தர்களுக்கு தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனம் மற்றும் ரூ.150 மற்றும் ரூ. 100 ஆகிய வழிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததாலும், ஏராளமானோர் காவடிகள் எடுத்தும் அலகு குத்தி முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்ததாலும் மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பொது வழியில் தரிசனம் செய்ய சுமார் நான்கு மணி நேரமும் கட்டண தரிசனம் செய்ய இரண்டு மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! விஐபி தரிசனம் மற்றும் உள்ளூர்வாசிகள் கட்டணமின்றி சிறப்பு தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதியில் இருந்து முருகப் பெருமானைக் காண வந்த பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மலைக் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் திருக்கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நீண்ட நேரம் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. .
முன்னதாக வைகாசி கிருத்திகை விழாவையொட்டி மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை உற்சவர் வெள்ளி மயில் வாகனத்தில் மலை கோவில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இதையும் படிங்க:Weekly Horoscope: மே 5 வது வாரத்திற்கான ராசி பலன்!