திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் காலை 8 மணிக்கு சிபிசிஐடி அலுவலர்கள் முன்னிலையில் 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், தடயவியல் நிபுணர்களுடன் மாணவியின் சகோதரன் ஒப்புதலுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
இதற்கிடையில், “மாணவி உயிரிழப்பிற்கான காரணத்தை சிபிசிஐடி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். தற்கொலைக்கான காரணம் குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை” எனக்கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது அண்ணன் கையெழுத்திட மறுத்தார். இதனால் ஒன்றரை மணி நேரம் காவல்துறையினர், திருவள்ளூர் எம்எல்ஏ வீ.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், அருணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.