திருவள்ளூர்:மேலக்கொடண்டையார் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபு (55). இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் ஜீவிதா, நீலாவதி, சித்ரா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.
பாபுவுக்கும், அவரது சகோதரர் பக்தவச்சலம் என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக உள்ள சித்ராவுக்கு சீமந்த விழா நடத்திய பாபு தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அந்த விழாவுக்கு மற்ற இரண்டு மகள்களும் சேர்ந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது பாபுவின் சகோதரர் பக்தவச்சலம், அவரது மனைவி தரணி, மகன்கள் அஜித்குமார், சக்தி ஆகியோர் சேர்ந்து பாபுவின் வீட்டுக்கு வந்து சொத்து பிரச்சினை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பக்தவச்சலத்தின் மனைவி தாரணி, பாபுவை காலணியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த பாபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது, உடல் உடற்கூராய்வுக்குப் பின்னர் தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.