திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வெங்கட்ரமணா தலைமையில் நேற்று (செப். 30) நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கூட்டம் தொடங்குவதாக அறிவித்த உடனே திமுக ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மகாலஷ்மி மோதிலால், “ஒன்றியத்தில் இதுவரை வரவு செலவு கணக்குகள் முறையாக மன்ற உறுப்பினர்களுக்கு காட்டப்படவில்லை.
கரோனா தடுப்புப் பணிகளில் இதுவரை சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு கணக்கு காட்டுகின்றனர். ஆனால் அவர்கள் கூறியுள்ளபடி இங்கு முறையாக அந்தத் தொகை அளவு செலவு செய்யப்படவில்லை. இதில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது.
மேலும் பூண்டி ஒன்றியத்தில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளில் சுமார் ஒன்றே கால் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து முறையான விளக்கம் எங்களுக்கு அளிக்கப்படவில்லை” என்ற கருத்தைக் கூறினார்.
பின்னர் அவர் உள்பட ஒன்பது திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் நடைபெறாமல் பாதியிலேயே முடிவடைந்தது.