திருவள்ளூர்: இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிக்கு விரைவில் அரசின் ஒப்புதல் வழங்கப்பட உள்ள நிலையில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதனை பொதுமக்களுக்கு எவ்வாறு அளிப்பது என நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவடத்திற்குட்பட்ட பூவிருந்தவல்லி மேம்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஜன.02) நடைபெற்றது.
முதல்கட்டமாக மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், லேப் டெக்னிஷன் என 25 பேருக்கு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில், முதலாவதாக, 25 பேரும் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, உடல் வெப்பமும், ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் ஆதார் அட்டையுடன், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என இரண்டு ஆதாரங்கள் கேட்கப்படுகின்றன.
பின்னர் கரோனா தடுப்பூசி போடும் பயனாளிகளின் விவரம் கணினி மூலம் கோவிட்-19 செயலியில் பதிவு செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் அறையில் தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெற்றது.