தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலுவை தொகையை தரக்கோரி ஒப்பந்ததாரர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்! - சென்னை அண்மைச் செய்திகள்

ஆவடி மாநகராட்சி தராமல் நிலுவையில் வைத்துள்ள தொகையை தரக்கோரி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்ததாரர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
ஒப்பந்ததாரர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

By

Published : Dec 16, 2020, 6:50 PM IST

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியில், 100க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மாநகராட்சி பகுதிகளில், தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் கால்வாய், கட்டட பணிகள் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக, இந்த ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு பணிகளை செய்துள்ளனர். அதற்கான பில்லை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம், பில்களுக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணிகளை தொடர முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஒப்பந்ததாரர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இருந்தபோதிலும் நிலுவை தொகையை வழங்காமல் அலுவலர்கள் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தரையில் அமர்ந்து போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்கள் இன்று(டிச.16) ஆவடி மாநகராட்சி வளாகத்தில் திரண்டனர். பின்னர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

காவல் துறையினர் பேச்சுவார்த்தை

தகவலறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவல் துறையினர் போராட்டத்தைக் கைவிடுமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது, ஒப்பந்ததாரர்கள், தாங்கள் செய்த பணிகளுக்காக சுமார் ரூ.50 கோடிக்கான நிலுவை தொகையை 6 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் தரவில்லை. நாங்கள் பல பணிகளை கடன் வாங்கி செய்துள்ளோம். இந்த பணத்தை திரும்ப கேட்டு கடன்கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்கின்றனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் அவதிப்படுகிறோம். இதனால், எங்களின் நிலுவை தொகையை நிர்வாகம் தருவதாக கூறினால்தான், போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக கூறினர்.

இதனையடுத்து, காவல் துறையினர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் நாராயணன், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம், நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைவில் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:ஹிட்லரைவிட எடப்பாடி பழனிசாமி மோசம்’: டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details