திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மாதம் ரூபாய் 6000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
காரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் மட்டுமே 33 விழுக்காடு பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்து வந்ததாலும் போக்குவரத்து வசதி இல்லாததாலும் பணிக்கு வர இயலவில்லை.
இதனால் பணிக்கு வராத அவர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அனல்மின் நிலைய வாயிலில் தகுந்த இடைவெளியை பின்பற்றி சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவை மதிக்காமல் அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.