திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவாக்சின் தடுப்பூசி போடுவது குறித்தும், கரோனா நோயாளிகளை மருத்துவர்கள் கையாளும் முறை குறித்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவாவிடம் கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன் ஆய்வில் அனைத்தும் திருப்திகரமாக உள்ளது.
திரைப்பட நடிகர் விவேக் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் தடுப்பு ஊசி போட்டதால்தான் அவர் உயிரிழந்தார் என தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல, இருந்தாலும் லட்சத்தில் ஒருவருக்கு அது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. தினசரி இந்த மருத்துவமனையில் 500 நபர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்த நிலையில், திரைப்பட நடிகர் விவேக்கின் மறைவுக்குப் பின்னர் தடுப்பூசி போடுவது 200ஆக குறைந்துள்ளது. மக்களிடம் தேவையில்லாமல் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க வேண்டும்.