திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பெரியநாக பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருப்பவர் சுலோச்சனா. இவர் அந்தப் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஏலம் எடுத்தவர்களுக்கு, சீட்டு பணம் தராமல் சுலோச்சனா ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், கூலித் தொழிலாளி கார்த்திகா மற்றும் பாதிக்கப்பட்ட சிலர் இன்று(நவ.18) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுலோச்சனா மீது புகார் அளித்தனர்.
அதில், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த சத்துணவு அமைப்பாளரான சுலோச்சனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணம் கேட்டால் அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும், சிறுக சிறுக சேமித்து கட்டிய சீட்டு பணத்தை ஏமாற்றியதால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சாலை ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத பேரூராட்சி: களத்தில் இறங்கிய பொதுமக்கள்