திருவள்ளூர்:ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் தலையில் அரிவாள் வெட்டுபட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவர்கள் புறநகர் ரயிலில் சென்று வருகின்றனர். இந்த மாணவர்களிடையே ரயிலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆக.16) ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரி தக்கோளம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தினேஷ் தலையில் பலத்த வெட்டுப்பட்டு பலதத காயத்துடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், அரிவாள் வெட்டு காயங்களுடன் கல்லூரி மாணவர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் காவலர்கள் காயம்