சென்னை பச்சையப்பன் கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் புறநகர் ரயில்களில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிளாட்பார்மில் தேய்த்துக்கொண்டும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் குறுந்தகவல் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தன.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே இரும்புப்பாதை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, திருவள்ளூர் ரயில் நிலைய நான்காவது நடைமேடையில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சோதனை செய்தனர்.
அதில் திருவாலாங்காடு பகுதியைச்சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவன் தனுஷிடமிருந்து பட்டாக்கத்தியினை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டை பகுதியைச்சேர்ந்த மதன் என்ற மாணவனைப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில், மதனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. மின்சார ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்காக பச்சையப்பன் கல்லூரியினைச் சேர்ந்த விஜயகுமார், அரக்கோணம் பாலா, ஊத்துக்கோட்டை தீபக், சந்தோஷ் குமார், திருவள்ளூர் ஆகாஷ் மற்றும் சரத் ஆகிய 6 பேரை பிடித்து எச்சரித்து, வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து போலீசார் அனுப்பினர்.
இதையும் படிங்க:Video: ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு