தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்தபிறகு திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்து வரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், காவலர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பு அறையில் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது திறக்கப்படும்.
அனைத்து இருப்பு அறைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக மரப்பலகையும், இரும்பினால் செய்யப்பட்ட அடுக்குகளும் அமைக்கப்படுகின்றன. இந்த மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், மையத்தில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும், வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையாவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளி, கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமீதுல்லா உள்பட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது- திமுக குற்றஞ்சாட்டு