திருவள்ளூர்:தமிழ்நாட்டில் வீர விளையாட்டாக சிறப்பு பெற்ற சேவல் சண்டையில், சூதாட்டம் நடைபெறுவதாக எழுந்த புகார்களால் இப்போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் கடந்த 25 ஆண்டுகளாக சேவல் போட்டிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டும் கிராம மக்களின் பொழுது போக்கு மட்டுமின்றி மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும் சேவல் சண்டை போட்டிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் சேவல் சண்டைக்கு சிறப்பு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து தங்கானூர் பகுதியில் வெற்றுக்காலுடனான சேவல் சண்டை போட்டிகள் இன்று (ஜன.20) தொடங்கின. இதில் பங்கேற்க சேவல் வளர்ப்போர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் களத்தில் குவிந்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்க வந்தவர்கள் சேவல் சண்டை போட்டி நிர்வாகத்திடம் 500 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்துக்கொண்டு சேவல் வகைகள், எடையினைப் பொறுத்து சேவல் மோதலுக்கு அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக சேவலின் தலையில் இருக்கும் பூவை பொறுத்து குருவிப்பூ சேவல், மத்தாப்பூ சேவல், தவக்களைப்பூ சேவல், கத்திப்பூ சேவல், ஊசிப்பூ சேவல் ஆகிய வகைகளும் இதேபோல் வெள்ளைக்கால், பேய்கருப்பு, பசுப்புக்கால், பூதக்கால், முகைக்கால், கருங்கால் ஆகிய வகைகள் என பிரித்து சேவல் சண்டை போட்டிக்கு விடப்படுகின்றது.