திருவள்ளூர்: மப்பேடு அடுத்த திருமணிக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கப்பட்ட திருவிழா கடந்த நான்கு தினங்களாக நடைபெற்றது. இதில், அம்மன் ஊர்வலம் கிராமத்திலுள்ள ஒவ்வொரு பகுதியாக சென்றது.
அம்மன் வீதி உலாவின் கடைசி நாளான ஜூன் 24ஆம் தேதியன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அம்மன் உலா வரும்போது மாலை அணிவியுங்கள் என கண்டித்ததாக கூறப்படுகிறது.
மோதல்:
இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆனஸ்ட் ராஜ் (26) என்ற இளைஞரை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் வீடு புகுந்து அவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், ஆனஸ்ட்ராஜ், அவரது நண்பர் ஆகியோர் படுகாயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காவல் துறை பாதுகாப்புடன் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் அங்கு பதற்றம் நிலவியதால், திருவள்ளுர் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.
நான்கு பேர் கைது:
இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு மாதம் முன் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆனஸ்ட்ராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன், காரணமாக இந்த மோதலில் ஆனஸ்ட்ராஜ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கிடையே கரண்டி சண்டை: வீடியோவால் ஒருவர் கைது!