திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன் அவர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து "ஸ்டாலின் தான் வராரு ; தளபதி தளபதி எங்கள் தளபதி " ஆகிய
பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, குடியிருப்பு பட்டா மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் என சுமார் இருநூறு பயனாளிகளுக்கு முதலமைச்சர் உதவித்திட்டங்களை வழங்கினார்.
'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்':அப்போது உரையாற்றிய முதலமைச்சர், 'நரிக்குறவர்கள் மட்டுமின்றி எளிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தற்போது அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விளிம்புநிலை மக்கள் அரசை தேடி வர வேண்டாம். நாங்களே தேடி வந்து அடிப்படை வசதிகளை செய்துகொடுப்போம். தமிழ்நாடு மக்களின் ஒவ்வொரு இலக்கை எட்டவும் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது' என்றார்.