திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையாலும், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு அதன்மூலம் பெறப்படும் நீராலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அணையின் பாதுகாப்புக் கருதி சுமார் 35 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுவந்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளான மணலி புதுநகர், நாபாளையம், சடயங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மு.க. ஸ்டாலின் மணலி புதுநகர், சடயங்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின் அப்போது தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், திருவொற்றியூர் கே.பி.பி. சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் வெள்ள பாதிப்பு: களத்தில் ஸ்டாலின்!