திருவள்ளூர்: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசி கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, முதலமைச்சராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் 371 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இன்று (செப்.09) காலை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியாலா பகுதியில் வைத்து அவரை சிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு கைது செய்யப்படும் தகவலை அறிந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து வன்முறைகளை தவிர்க்க போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன்ர். சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்கள் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரது கைது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக ஆந்திர மாநில சிஐடி போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊழல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சந்திரபாபு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அவரை சட்டவிரோதமாக போலீசார் கைது செய்தாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.