திருவள்ளூர்: திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் (Central Narcotics Control Division Regional Director) அரவிந்தன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அரவிந்தன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாட்டில் 7 கோடி பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். போதைப் பொருள் நாம் நாட்டின் மீது செலுத்துப்படும் போர். கடந்த 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய நாட்டில் 7 கோடி போர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என தெரிய வந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போதைப் பொருட்களை இந்தியாவில் கொண்டு வந்து நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்.
போதைப் பழக்கத்தைத் தடுக்க தினந்தோறும் காலை, மாலை என இரு வேளையும் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், போதைப் பழக்கத்திலிருந்து தடுக்க ஆசிரியர்கள் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்.
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காவல் துறையிடம் தொடர்ந்து நட்பு வைத்திருந்தால் மாணவர்கள் மத்தியில் உள்ள போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியும். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அத்தகைய சட்டங்களைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்றார்.