திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்(32). இவர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக தனது டாடா ஏசி வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு வீடாக சென்று காய்கறி விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் அமர்ந்திருந்த அசோக்கை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த புல்லரம்பாக்கம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டில் அசோக், அவரது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அந்த முன்விரோதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து புல்லரம்பாக்கம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்பட ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடும் வேட்டையில் இறங்கினர்.
குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர் பின்னர், தலைமறைவாக இருந்த சகோதரர்கள் சுரேஷ்(32), சுரேந்திரன் (34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்றோரை அம்மிக்கல்லைப் போட்டு கொலைசெய்த மகன் கைது!