திருவள்ளூர்:பள்ளிப்பட்டு அருகேயுள்ள பொம்ம ராஜாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (29). இவரது நண்பர்கள் கண்ணபிரான், முருகன், பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் வேலையில்லாமல் இருப்பதால் தனக்குத் தெரிந்தவர்களின் விவரங்களை கூறி அவர்களிடம் வேலை கேட்டுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பணம் மோசடி
இதனால், தங்களுக்கு வேலை வாங்கித் தருமாறு அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி, அரவிந்தன், ராகுல், ஆகியோரை அணுகியுள்ளனர். அவர்கள், தங்களுக்கு ரயில்வே துறையில் உயர் அலுவலர்களைத் தெரியும் எனக் கூறி ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய இளைர்கள் தலா 2லட்சத்து 50ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட அந்த கும்பல், இளைஞர்களை நம்ப வைப்பதற்காக நியமன ஆணையம், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
அந்த நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் அது போலியாக தயார் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அசோகன் தலைமையில் ஆய்வாளர் வில்லியம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
முதற்கட்டமாக, மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் அரவிந்தன் (24), ராகுல் 26 ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி ஆகிய மூவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை இந்த கும்பல் 40 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் அதிக வட்டி, இலவச தங்க நாணயம் தருவதாகப் பணம் மோசடி