திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தாலுக்காவில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தவர் சந்தானம் (32). நேற்று முன்தினம் (டிச.17) பூண்டியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சக நிருபர் ஏழுமலை என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சதுரங்கபேட்டை பகுதியில் சாலையின் வளைவில் திரும்ப முற்பட்டபோது, பக்கவாட்டில் நின்றிருந்த ஜேசிபி மீது மோதினார். அப்போது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலைக்கவசம் உடைந்ததில் சந்தானம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சக நிருபர் ஏழுமலைக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சந்தானம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று (டிச.18) மாலை சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி நந்தினி முன்வந்தார். ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு நிருபருக்கு விபத்து ஏற்பட்டதில் 6 மாத காலம் சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சாலை விபத்தில் சிக்கி அவர் மூளைச்சாவு அடைந்தார். அவருடைய மனைவி நந்தினி கடந்த 2019 ஆம் ஆண்டு முதுகு தண்டுவடம் உடைந்து சிகிச்சையில் இருந்து மீண்டுவந்தார்.
கணவனை இழந்து வறுமையில் வாடும் தனக்கு வேலை கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரை: பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கைது