தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை நடத்திவருகின்றனர். இன்று திருவள்ளூரில் இந்த சட்டத்தின் பாதகங்களை விளக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே கையெழுத்துப் பெற்றார்.
அப்போது பேசிய அவர், "அனைவரும் சமம் என ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கவும் ஒற்றுமையை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட கொடிய சட்டங்களை இயற்றி வருகிறது.
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், முறையான வேளாண் திட்டங்கள் இல்லாததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலையும் உள்ளது.
நாட்டில் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகள் இல்லாத வகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் போக்கை மக்கள் புரிந்துகொண்டு விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த விமர்சனங்களை திசைதிருப்ப இது போன்ற கொடிய சட்டங்களை விதித்து மக்களை பிளவுப்படுத்தும் வேலைகளை மத்திய பாஜக அரசு செய்ய முயற்சிக்கிறது.