திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயகுமார், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 6,521 பேருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இருசக்கர வாகனத்திற்கான மானியத்தொகை என 6 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 663 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்பிறகு அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், ' திமுக ஆட்சியில் பதினைந்து லட்சம் பேருக்கு 500 ரூபாய் மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது 38 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டு, வழங்கப்படுகிறது. இது தமிழ்நாடு முழுவதும் உள்ள 50% முதியோர்களுக்கான உதவித்தொகை ' என்றார்.