திருவள்ளூர் : இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் போட மறுத்த ஊழியர்களை சரமாரியாக தாக்கிய ஊழியர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
காக்களூர் பைபாஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று (அக் .7) இரவு 10.00 மணிக்கு மேல் ஐந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பெட்ரோல் போடுமாறு பங்க் ஊழியர்களை கட்டாயப்படுத்தி உள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் போட கூடாது என்ற அரசின் விதிமுறைகளை சொல்லி ஊழியர் பெட்ரோல் போட மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஊழியர்கள் சத்யா, கண்ணன், மேலாளர் சின்னதுரை ஆகிய மூவரையும் பலமாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய இந்த நபர்கள், 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து ஊழியர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருணாகரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் காவல்துறையினரிடம் இச்சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா காவல்துறையினர், சோதனை மேற்கொண்டனர். காயமடைந்த சத்யா, கண்ணன் இருவரும் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில் காவல்துறையினர் அவ்வழியாக வந்ததை கண்டதும் இரண்டு இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு மற்ற மூன்று இருசக்கர வாகனங்களில் கொள்ளை அடித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். எனவே காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுதரக்கோரி தந்தை ஆட்கொணர்வு மனு: இன்று விசாரணை...!