திருவள்ளூர்:சென்னை டி நகரில் இருந்து மாநகர பேருந்து இன்று (ஜூலை 18) காலை திருவள்ளூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த துரை என்பவர் ஓட்டி வந்தார். நடத்துநராக செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் (50) என்பவர் உடன் வந்தார்.
அந்த பேருந்து திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிறுத்தத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் துரையைத் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் துரை, பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு நடத்துநருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து வந்த 8 க்கும் மேற்பட்ட மாநகர பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு ஓட்டுநர் துரையைத் தாக்கிய சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.