திருவள்ளூர் மாவட்டம் புலியூர், பாக்கம், நத்தம்பேடு, கண்டிகை உள்ளடக்கிய பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கரில் விவசாயிகள் வேளாண்மை செய்துவருகின்றனர்.
2012ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இங்கு சேமிப்புக் கிடங்கு திறந்துவைத்துள்ளார். இதில், ஆண்டுதோறும் 55,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும்.
ஆனால், தற்போது சேமிப்புக் கிடங்கு திறக்கப்படாமல் பூட்டிக்கிடப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை வீட்டு வாசலில் கொட்டியும், கிடங்கின் முன்னர் கொட்டியும் வைக்கின்றனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் மழையில் நனைந்து ஓரிரு நாளில் முளைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "அறுவடை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் வேளாண்மை அலுவலர்களைச் சந்தித்து சேமிப்புக் கிடங்கினைத் திறக்க வேண்டுமெனக் கேட்டோம்.
அதற்கு செப் 1ஆம் தேதி திறப்பதாகக் கூறினார். அதனை நம்பி சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது நெல்களை களத்தில் கொட்டி வைத்துள்ளோம். தற்போது, புலியூரில் உள்ள கிடங்கை திறக்க முடியாது காதர்வேடு கொண்டுவர வேண்டும்" எனக் கூறுகின்றனர்.
அங்கு கொண்டுசெல்ல முடியாத நிலை இருப்பதால் வியாபாரிகள் ரூ.1500 முதல் 1800 வரை செல்லக்கூடிய நெல் மூட்டைகளை 700,800 ரூபாய்க்கு குறைந்த விலைக்கு கேட்கின்றனர்.
எனவே தங்களைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியரும் வேளாண் அலுவலர்களும் உடனடியாக புலியூரிலுள்ள சேமிப்புக் கிடங்கை திறந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கும் அவர்கள், இல்லையென்றால் விவசாயிகள் நாங்களே கிடங்கினை இடித்து விடுவோமென எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க காவல் துறை விழிப்புணர்வு!