திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது பழமை வாய்ந்த வண்டார்குழலியம்மை சமேத வடாரண்யேஸ்வரர் கோயில். இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த உப கோயிலாகும். சிவபெருமான் திருநடனம் புரியும் ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபையை உடைய பெருமை கொண்டது. திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகவும் விளங்குகிறது.
இந்தக் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா விழா விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் நேற்றிரவு (ஜன.5) 9 மணிக்கு கோயில் தலவிருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மகா அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆருத்ரா மகா அபிஷேகத்தை பக்தர்கள் காணும் வகையில் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே பெரிய அளவில் பந்தல்கள் போடப்பட்டது.