தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் கோயிலாகும். இக்கோயில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று, ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து, சிவகங்கை குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
இதன் பின்னர் சுவாமிகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து, அங்கு சுவாமி அம்பாள் கோயிலுக்கு உள்ளே வந்து, கதவைச் சாத்திக் கொண்டு நடராஜப் பெருமானைக் கோபித்துக் கொண்டு உள்ளே வரவிடாமல் தடுத்து விடுகிறார். இதனை அடுத்து, சுந்தரர் இரு தரப்பிலும் சமாதானம் செய்து, சுவாமியைக் கோயிலுக்குள் அழைத்து வரும் வைபவம் நடைபெற்றது.