திருவள்ளூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் பேரில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் காவல்துறை ஆகியோருடன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு மணிநேரம் ஆய்வு நடத்தினார் .
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. இல்லையென்றால், இன்னும் சில சட்டங்கள் கடுமையாக்கப்படும். மக்கள் வெளியில் வருவதை தடுக்க காய்கறி, மளிகை பொருட்கள், பால் மீன் போன்றவை வீடுகளுக்கு சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக்கம் போல் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படும்" என்றார்.